சம்மாந்துறை பிரதேச பொதுமக்கள் நாளை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்.
ஐ.எல்.எம் நாஸிம்
நாட்டிலும்,கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிகளிலும் வேகமாக பரவிவரும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் சம்மாந்துறை பிரதேசத்திலும் இனங்காணப்பட்டுள்ளதடு இந் நிலைமை தொடருமாயின் முற்றாக முடக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்மாந்துறை கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழு விசேட கூட்டம் இன்று (24) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் ,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்நெளஷாட், ,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம்.பாரிஸ்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், சம்மாந்துறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஜெயவர்தனா, சமயத் தலைவர்கள்,வர்த்தக சங்கத்தின் செயலாளர் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.
நாளை (25)பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து நடக்குமாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. சம்மாந்துறை பொதுச்சந்தையின் உட்பகுதி மூடப்படும் என்பதோடு மருந்தகங்கள்(பாமசி), பலசரக்குக்கடைகள் மற்றும் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள்தவிர்ந்த சகல அத்தியவசியமற்ற கடைகளும் குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் சிகைஅலங்கார நிலையங்கள் (சலூன்) உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படவேண்டும்.
2. பாதையோர வியாபார நடவடிக்கைகள் யாவும் முற்றாக தடைசெய்யப்படுவதுடன் நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
3. நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் கண்டிப்பாக அன்டிஜன் பரிசோதனை அறிக்கையினை உடன் வைத்திருப்பதோடு, சமூகஇடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பேணி வர்த்தக நடவடிக்கைகளில்ஈடுபடுதல் வேண்டும்.
4. எழுமாறான அன்டிஜன் பரிசோனைகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் என்பதோடு இதற்கு சகல பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
5. அத்தியவசிய பொருட் கொள்வனவிற்காக மாத்திரம் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒருவர் மாத்திரம் வெளியிடங்களுக்கு வரமுடியும் என்பதோடு சிறுவர்கள் மற்றும் முதியோர்களை அழைத்து வருவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
6. பொது இடங்களில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பொது மக்கள் கூடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் மற்றும் சமூகஇடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது.
7. மத நிறுவனங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாதென்பதோடு முஸ்லிம் சமய மற்றும் இந்து கலாச்சார திணைக்களங்களின் சுற்று நிரூபங்களை பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானங்களை புறக்கணித்து நடப்பவர்களுக்கு எதிராக எந்தவித தயவு தாட்சணியமும் இன்றி சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிளால் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும். என்பதையும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments
Thanks for reading….