இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் ஆதரவில் சுகாதார நிபுணர்களின் கூட்டம் ஒன்று இன்று (21) இடம்பெற்றது.
அண்மையில் கொண்டாடப்பட்ட புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடத்தை காரணமாக வைரஸ் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இன்றைய கூட்டத்தின் போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
சிகிச்சை மையங்களின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உயர்தர ஆக்ஸிஜனை வழங்குதல்.
தரவு சேகரிப்பை எளிதாக்குதல்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) எண்ணிக்கையை அதிகரித்தல்.
கொரோனா தொற்று நோயாளிகளை நோய்த்தொற்று அளவின் அடிப்படையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஒரு அமைப்பை உருவாக்குதல்.
கொரோனா தொற்று சிகிச்சைக்காக தொகுதி மற்றும் மாவட்ட வாரியான மருத்துவமனைகளை நியமித்தல் மற்றும் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்.
மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் சாதாரண நோயாளிகளுக்கு இணையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்தல்.
நாள் ஒன்றுக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைந்தது 15,000 ஆக உயர்த்துதல்.
தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறைகளை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்காக ஒரு தனி தனிமைப்படுத்தல் சட்டத்தை உருவாக்குதல்.
-Yazh News
No comments
Thanks for reading….