அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
தலைநகர் வொஷிங்டன் டிசியில், நாடாளுமன்றம் அமைந்துள்ள யூ.எஸ். கெப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே இப்பதவியேற்பு வைபவம் நடைபெற்றது. அமெரிக்காவின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்தார்.அமேரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதி ஜோ பைடன் ஆவார்.
பைடன் பதவியேற்பதற்கு முன்னர், அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹரிஸ் (56) பதவியேற்றார்,. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் உப ஜனாதிபதியாகியுள்ளார் கமலா ஹரிஸ். ஆசிய, ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க உப ஜனாதிபதியும் கமலா ஹரிஸ் ஆவார்.
ஜோ பைடனுடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் இவ்வைபவத்தில் பங்குபற்றவில்லை.இவ்வைபவத்துக்கு முன் அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி புளோரிடா மாநிலத்திலுள்ள தனது வாசஸ்தலம் நோக்கிப்புறப்பட்டார்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளின்டன், டொனால்ட் ட்ரம்பின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்த மைக் பென்ஸ் உட்பட பல பிரமுகர்கள் இவ்வைபவத்தில் பங்குபற்றினர்.
இத்தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள நீண்டகாலமாக மறுத்து வந்தார். அவரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜோ பைடனின் இன்றைய பதவியேற்பை முன்னிட்டு, கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின்போது உள்வட்டார தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வொஷிங்டன் டிசியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 25,000 தேசிய காவல் படையினர் தொடர்பிலும் எவ்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு விசேட சோதனை, புலனாய்வுகளை மேற்கொண்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thanks for reading….