நாம் பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழும் ஒரு காலம் இது. இன்னும் ஒரு சில நாட்களில் பாராளுமன்ற தோ்தலை எதிா்நோக்கியிருக்கின்றோம். இத்தோ்தலில் சவால்களுக்கு முகம் கொடுத்து, சமூகத்தை வழிநடாத்தும் பொருத்தமான பிரதிநிதிகளை தெரிவு செய்வது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கின்றது.
பல உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை இன மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. ஆனால், இலங்கையில் வாழும் நாம் வாக்களிக்கும் உரிமை மற்றும் எமது மாா்க்கத்தைப் பின்பற்றும் உரிமைகளைப் பெற்று வாழ்கின்றோம். இச்சந்தா்ப்பத்தில் உரிமைகளைப் பெற்றுத் தந்த எமது முன்னோரை நன்றியுடன் நினைத்துப் பாா்க்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
எமக்கு கிடைக்கப்பபெற்றிருக்கின்ற வாக்குரிமையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் எமது சமூகம் எதிா்காலத்தில் தலை நிமிா்ந்து வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தலாம். இது இக்காலத்தைப் பொருத்தவரையில் கடமை என்று கூட குறிப்பிடலாம்.
வாக்களிப்பதை சாட்சியமளித்தல் என்றும் பிரதிநிதியாக நின்று குரல் கொடுப்பவரை நியமித்தல் என்றும் இஸ்லாமிய அறிஞா்கள் சிலர் வரைவிலக்கணப் படுத்தியுள்ளனர். வாக்களிப்பதற்காக வழங்கப்படும் வாக்காளா் அட்டை சாட்சியளிப்பதற்கான அழைப்பு என்றும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவா்கள் குறிப்பிடுகின்றனா்
‘சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (பகரா:283)
எனவே, உங்கள் வாக்குகளை தகுதியானவர்களுக்கு வழங்குவதே சிறந்த சாட்சியமளித்தலாக அமையும். மாற்றமாக, தகுதியற்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது பொய் சாட்சியமாக அமைந்துவிடக்கூடும். இஸ்லாத்தின் பார்வையில் பொய் சாட்சியம் பெரும் பாவங்களில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனஸ்(ரலி) அறிவிக்கின்றாா்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)' என்று கூறினார்கள்
எனினும், இன்றைய வேட்பாளா்களில் பெரும்பான்மையானவா்கள் 100% தகுதியானவா்களும் அல்லா், 100% நோ்மையானவா்களும் அல்லா். ஆனால், பின்வரும் அம்சங்களில் அவதானம் செலுத்தி, ஓரளவு பொருத்தமான வேட்பாளா்களையேனும் தெரிவு செய்வது எமது கடமையாகும்.
1. நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளா் ஏற்கனவே பதவியில் இருந்தவர் எனில்,
- அவா் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த சேவைகள் எவை? சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்றும் திறன் அவருக்கு இருக்கின்றதா? இன வன்முறை, கொரோனா நெருக்கடி காலங்களில் அவர் மக்களுடன் இருந்தாரா? போன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கின்றதா, அவருக்கு நீங்கள் வாக்களியுங்கள்.
2. புதிய வேட்பாளர் ஒருவராயின்,
- அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவா் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளாரா? அவா் கல்வி கற்ற, அறிவும் திறனும் கொண்டவரா? அவா் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தாரா? போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைக்குமெனில் உங்கள் வாக்கை அவருக்கு அளியுங்கள்.
3. நீங்கள் தெரிவு செய்யப்போகும் வேட்பாளரின் மாா்க்க தொடா்பை நிச்சயமாக பாா்க்கவேண்டும். குறைந்த பட்சம் தொழுகையையேனும் உரிய நேரத்தில் தொழுகின்றாரா என்பதை அவதானியுங்கள்.
4. வேட்பாளா் ஒருவரின் பொருளாதார நிலையைப் பற்றியும் அறிந்துக் கொள்ளுங்கள். நாம் அறிந்த வகையில் அவா் என்ன தொழில் அல்லது வியாபாரம் செய்கின்றாா்? அவரது வருமானமீட்டல் ஹலாலானதா என்பதையும் அறிந்துக் கொள்ள முயற்சியுங்கள்.
5. குறித்த வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் எப்படி அமைந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பாா்க்க வேண்டும். அவர் வாக்குகளை வாங்க பணம் செலவளிக்கிறாரா? போதையும் அட்டகாசமும் ஆடம்பரமும் அவரது பிரச்சாரத்தில் காணப்படுகின்றதா?இக்கேள்விகளுக்கு உங்களுக்கு திருப்தியான பதில் கிடைத்தால் அவருக்கு வாக்களிக்கலாம்.
மேற்குறித்த அம்சங்கள் தொடா்பாக வாக்களிக்கும் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நீங்கள் இவ்வளவு காலமும் எந்தக் கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களித்தீா்கள் என்பது முக்கியமல்ல. இந்தத் தோ்தலிலும் தவறு விடுவீா்களாயின் நிச்சயமாக நீங்கள் இறைவனின் விசாரணையிலிருந்து தப்பிக் கொள்ள முடியாதிருக்கும்.
எனவே, நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து சமூகத்திற்காக, நாட்டிற்காக பணியாற்ற கூடிய சிறந்த பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.
Kumbukkandura News
No comments
Thanks for reading….