கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவ மையங்களை மதிப்பீடு செய்து காக்க பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணி:

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு - பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைப்பதாக நான் நேற்று பௌத்த ஆலோசனை சபையிடம் உறுதி அளித்தேன்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாமாக அழிவடைவது மற்றும் சேதமாக்கப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் பல விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஒன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவேன் எனவும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பௌத்த ஆலோசனைச் சபை, இரண்டாவது தடவையாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் ஒன்றுகூடியது.
அப்போது கலந்துரையாடும் போதே - மகாசங்கத்தினரிடம் நான் இதனை தெரிவித்தேன்.
பௌத்த சமயத்திற்கும் திரிபீடகத்திற்கும் முரணாக சில பிக்குகளின் செயற்பாடுகள் உள்ள காரணத்தினால் பௌத்த சாசன உரையாடலொன்றின் தேவை குறித்தும் மகா சங்கத்தினர் விரிவாக எனக்குத் தெளிவுபடுத்தினர்.
அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பதனையும் மற்றும் ஏனைய பரிந்துரைகளையும் சமர்ப்பித்தால், எனது பதவிக் காலத்தில் அவற்றுக்குத் தேவையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் நான் குறிப்பிட்டேன்.
உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் 19 நோய்த்தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எமது நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து எமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணியை மகா சங்கத்தினர் பாராட்டினர்.
ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எழுமானமாக எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என நான் மகாசங்கத்தினரிடம் தெரிவித்தேன்.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் குவைட் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கொவிட் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என நான் தெரிவித்தேன்.
பிரிவெனா மற்றும் பாடசாலை கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்தும் பௌத்த ஆலோசனை சபை விரிவாக கலந்துரையாடியது.
இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைக் கல்வித் திட்டத்திலிருந்து நீக்குவதற்கு கடந்த சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
அப்போது - எனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கு நான் வழங்கியிருந்தேன் என்பதை நான் குறிப்பிட்டதுடன், தேசிய கல்விக் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்பதனையும் தெரிவித்தேன்.
நாடெங்கிலும் பரவியுள்ள போதைப் பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விரிவான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மகாசங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் மகாசங்கத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது - கடந்த குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டினுள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்ற எம்மால் முடிந்திருக்கின்றது என்பதனை நான் அவர்களுக்கு நினைவூட்டினேன்.
இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் நான் உறுதியளித்தேன்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான எனது பொறுப்பை நான் முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும், அதற்காகத் திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நான் நியமித்துள்ளேன் என்பதனையும் நான் சுட்டிக்காட்டினேன்.
புலனாய்வுத் துறை பலப்படுத்தப்பட்டு முழுமையான அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்குப் பாதுகாப்பு தரப்புக்கு உரிய ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன என்பதனையும் நான் தெரிவித்தேன்.
“படைவீரர்கள் நினைவு தின விழாவில் நீங்கள் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்க அகராதியில் வார்த்தைகள் இல்லை!” எனக் குறிப்பிட்டு என்னைப் பெருமைப்படுத்திய மகாசங்கத்தினர், அதனையிட்டு என்னை ஆசிர்வதித்தனர்.
தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமான ஊடக நடத்தையை மகா சங்கத்தினர் விமர்சித்தனர்.
உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையைப் பாராட்டும் போது எதிர்க்கட்சிகள் மட்டும் நேர்மையற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் எதர்ப்பது வெறுக்கத்தக்கதாகும் என்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
கொவிட் நோய்த்தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் மகாசங்கத்தினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதுடன், அதற்காக, பிக்குமார்களைக் கொண்ட குழுவொன்றை விரைவில் நியமித்து உரிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர்,
அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர்,
கலாநிதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கள தேரர்,
கலாநிதி சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர்,
ருவன்வெலி மகா சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர்,
அமரபுர மகா நிகாயவின் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர்,
தென் இலங்கை பிரதான சங்கநாயக்கர் சங்கைக்குரிய மெடரம்ப ஹேமரத்ன தேரர்,
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் -
உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த கலந்தாராய்வில் பங்கேற்றனர்.
எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
No comments
Thanks for reading….