1924 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மிக சிறப்பாக இயங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எமது நாட்டுக்குக் கிடைத்த பெரும் ஒரு வரப்பிரசாதமாகும். இதனைப்புரிந்து கொள்ள முடியாமல் ஜம்இய்யாவையும், அதனது தலைவரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில துர்பாக்கியவான்களைக் கண்டு கைசேதப்படுவதா? கவலைப்படுவதா? என்று ஓர் ஏக்கம். வல்லவன் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியவேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பித்த காலம் முதல் மார்க்க விடயங்களுடன் மாத்திரம் சுருங்கிக் கொள்ளாமல் பரந்த சிந்தனையுடன் இயங்கிவந்துள்ளது. பொதுப் பணிகளில் கூட தாராளமாக தன்னாலான பங்களிப்புகளைச் செய்துள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும். சுனாமி மற்றும் வெள்ளப் பெருக்குகளில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியமை, மூதூர் பயங்கரவாத பிரச்சினையினாலும், அளுத்கம, கின்தோட்டை, திகன, குருணாகலை, மினுவங்கொடை, கொட்டராமுல்லை, போன்ற இடங்களில் ஏற்பட்ட கலவரங்களினாலும் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டமை, தம்புள்ளை, தெஹிவலை, குருணாகலை போன்ற மேலும் பல இடங்களில் பள்ளிவாயல்களில் ஏற்பட்ட பிரச்சினைகளில் பங்கு கொண்டமை, கீரீஸ் மனிதர் விவகாரம், வெள்ளை வேன் கடத்தல் விவகாரம், இன்னோரன்ன பல விடயங்களில் தனது சக்திக்கும் அப்பால் சென்று முடியுமான பங்களிப்புகளைச் செய்து வந்துள்ளது. இன்றும் செய்து கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வமைப்பின் பணிகள் மிக சிறப்பாக நடைபெற இந்த அமைப்புக்குத் தலைமை தாங்கியவர்கள், ஏனைய பொறுப்புதாரிகள், உலமாக்கள், அந்த அமைப்புக்கு உடல், பொருள், பணம், அறிவு போன்றவைகளால் உதவி ஒத்தாசைகள் செய்த நலன் விரும்பிகள் அனைவரும் தனது காரியங்களை மிக சிறப்பாகச் செய்துள்ளார்கள். இன்றும் தனது சொந்தக் காரியங்களைக் கூட தியாகம் செய்து இதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவரையும் ஈருலகிலும் பொருந்திக் கொள்வானாக!
அதிலும் குறிப்பாக தற்பொழுது தலைவராக இருக்கக் கூடிய அஷ்-ஷைக் எம்.ஜ.எம் ரிஸ்வி முப்தி அவர்களின் சேவை அளப்பரியது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல் இவரின் பெறுமதி இவர் நீங்கிய பின்தான் தெரிய வரும் என்பதில் சந்தேகம் கிடையாது. அவர்கள் தமது பணியினை ஆரம்பித்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. அன்றைய தினம் இரவு நேரத்தில் கொழும்பை நோக்கி வர வேண்டிய நிலை எற்பட்டது. அன்று தனது பச்சிளம் குழந்தை சுகயீனம் உற்று வைத்தியசாலையில் இருக்கிறார். அதனையும் பொருட்படுத்தாது சமூகத்தின் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கொழும்புக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அவ்வமையம் தனது குழந்தையின் மரணச் செய்திவருகின்றது. அன்று தனது சொந்தக் காரியங்களைக் கூட தியாகம் செய்து ஜம்இய்யாவின் சேவைக்கு முக்கியத்தும் கொடுத்தவர். இன்றும் தனது பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார். அல்லாஹ் அவர்களது வாழ்வில் அருள்புரிவானாக! அவர்களது வாழ்நாளின் ஆயுட் காலத்தை நோய் நொடி இன்றி நீடித்துவைப்பானாக! ஈருலகிலும் அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! அவர்களின் சேவையினை புரிந்து கொள்ளாமல் குறை கூறிக் கொண்டிருக்கும் சினேகிதர்களுக்கு அல்லாஹ் விளக்கத்தை வழங்குவானாக!
தற்போது எமக்கு மத்தியில் கொவிட் 19 என்ற நோயின் தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயம் ஒரு பேசு பொருளாகமாறியுள்ளது. இவ்விடயத்தில் ஜம்இய்யா. சிவில் அமைப்புகள், துறைசார்ந்தோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட கருமங்கள் யாவை, இன்று வரை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற விடயங்களை சுருக்கமாக கீழுள்ள லிங்கில் அவர்கள் விளங்கப்படுத்துகின்றார்கள்.
கொவிட் 19 என்ற நோயினால் மரணிப்பவர்களை அடக்கம் தான் செய்ய வேண்டும், அதற்குரிய அனுமதியினை அரசாங்கம் தந்துதான் ஆக வேண்டும், அதனைவிட்டுக் கொடுக்க முடியாது அதற்காக முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே அதற்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. இக்கட்டத்தில் மரணிப்பவர்களின் நிலைமை என்ன? அரசாங்கத்திற்கு கட்டுப்படுவதா? இல்லையா? வழி காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஜம்இய்யாவிற்கு உள்ளது.
அரசாங்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படல் வேண்டும். அதேநேரம் எமது உரிமைகளை முறையாக பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். எமக்குரிய உரிமை கிடைக்கும் வரை எரிக்கப்படும் ஜனாஸாக்களின் சட்டம் என்ன? எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை என்ன செய்வது? எமது பிடிவாதத்தினால் அதனை விட்டுவிடுவதா? அவ்வாறு விட்டு விட்டால் சாம்பலுக்கு என்ன நடக்கும், ஹதீஸ்களின் அறிவிப்பின் படி “உஜுபுஸ் ஸனப்” எனப்படும் முள்ளம் தண்டின் மூலம் என்றுமே அழியாது. எனவே நெருப்பும் அதனைத் தீண்டாது. இக்கட்டத்தில் மார்க்க அறிஞர்கள் இதற்கும் வழிகாட்டுவது தார்மீகப் பொறுப்பாகும். அவ்வடிப்படையில் தான் ஜம்இய்யாவின் பத்வாபிரிவு ஒன்று கூடி எரிக்கபட்ட ஜனாஸாவின் சாம்பலையாவது அடக்கம் செய்து அதற்குரிய கடைமையை நிறைவேற்றுவோம் என்று பத்வா வழங்கியுள்ளது.
இந்த யதார்த்தங்களை புரிந்து கொள்ளமால் இருக்கும் புதிர்களை கண்டு என்ன சொல்வது. இதற்காக வழிகாட்டிக் கொண்டிருக்கும் உலமாக்களின் அமைப்புகளை திட்டித் தீர்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் கூட்டாக ஒன்றிணைந்து எடுக்கும் முடிவுகளுக்குக் கூட ஒரு தனிமனிதனை நோக்கி ஏச்சிப் பேச்சுக்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ரமழானுடைய மாதம் நன்மைகள் பெற்றுக் கொள்ள வேண்டிய மாதத்தில் உலமாக்களை, அவர்களின் அமைப்புக்களை அநியாயமாக குறை சுமத்த வேண்டாம். தெரியமால் செய்தால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி மன்னிப்புகளை பெற்றுக் கொண்டு அல்லாஹ்விடமும் மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். உலமாக்களைக் குறை கூறியவர்கள், திட்டியவர்கள் பாரிய சோதனைகளை முகம் கொடுத்துள்ளார்கள். அதனுடைய தாக்கமும், சாபமும் பரம்பரை பரம்பரயாக வந்து சேரும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கோபப் பார்வையையும், அநியாயக்காரர்களின் பதுவாக்களையும் பயந்கொள்ளுங்கள்.
தல்துவை அபு அர்ஹம்
No comments
Thanks for reading….