உலகில் கோடிக்கணக்கானோர் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். மறைகிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் தாம் மரணித்த பின்னரும் நிலைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவர் தான் நளீம் ஹாஜியார்.
– அஹ்ஸன் ஆரிப் –
நளீமியாவில் கற்றுக்கொண்டிருந்த நேரம். ஒரு மாலைப் பொழுது அஸர் தொழுகைக்குப் பின்னர் திடீரென மாணவர்கள் அனைவரும் ஜாமிஆவின் பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டார்கள். முன்னால் நின்றுகொண்டிருந்த உஸ்தாத் கைருல் பஷர் அவர்கள் தொலைபேசியை வைத்துவிட்டு ‘ஒரு கவலையான செய்தி. ஹாஜியார் மௌத்தாகிவிட்டார்’ என்று சொன்னது மாத்திரம்தான் அதற்கு மேலால் அவரால் பேச முடியவில்லை. உட்கார்ந்துவிட்டார். பள்ளிவாசலில் ஒரு மயான அமைதி. இந்த மரணச் செய்தியை இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.
உலகில் கோடிக்கணக்கானோர் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். மறைகிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் தாம் மரணித்த பின்னரும் நிலைக்கிறார்கள். அவர்கள்தான் சமூகத்தில் அசாதாரணமான ஆளுமைகளாக வளம் வந்தவர்கள்.
ஒரு மனிதன் பிறக்கும் போது அவன் உலகில் என்னவெல்லாம் சாதிக்கப் போகிறான் என்பதை யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஒரு சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான்; ஏன் பிறந்தேன். என்னவெல்லாம் செய்யப் போகிறேன். இந்த உலகில் நான் எதனை விட்டுச் செல்லப்போகிறேன் என்பதையே சிந்திக்கபழகாத ஒரு சூழல் இது.
காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை மாடாக அலைந்து கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பவர்கள் பலரைப் பார்கிறோம். இவ்வளவு சேர்த்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் நியாயமான பதில் ஒன்று வெளிவராது.
இந்தப் பின்னணியில்தான் நளீம் ஹாஜியார் என்ற மாமனிதரை நோக்க வேண்டும். நளீம் ஹாஜியாரைப் பொருத்தமட்டில் அவர் ஒரு சாதாரண செல்வந்தர் மட்டும்தான். அவர் வாழ்ந்த போதே ஏன் இப்போதும் அவரை விட பல மடங்கு பெரும் கோடிஸ்வரர்கள் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களை சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்வதாக இல்லை.
நளீம் ஹாஜியார் தான் வசதிபடைத்த ஒரு அடியான் என்ற வகையில் தன்னிடமிருந்து அல்லாஹ் என்ன எதிர்பார்க்கிறான் என்பதில் அவருக்கு மிகத்தெளிவான பார்வை காணப்பட்டது. அந்த பொறுப்பை செவ்வனே நிறைவேற்றாமல் போனால் அல்லாஹ்விடம் நாளை மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை தெளிவாகப் புரிந்திருந்தார். அது மாத்திரமல்ல தனது பொறுப்பை எவ்வாறு விணைத்திறன் மிக்கதாக நீண்ட காலத்தில் சமூகத்திற்குப் பிரயோசனம் மிக்கதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாகப் புரிந்திருந்தார். இந்தத் தெளிவு சமூகத்தில் அதிகமான செல்வந்தர்களுக்கு இல்லாததனால்தான் அரசி மூட்டைகளை தமது வாகனங்களில் வந்து ஆரவாரத்தோடு பகிர்ந்தளித்தால் தமது கடமைகள் நிறைவேறிவிடும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நளீம் ஹாஜியாருக்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இருந்தது. அதனால்தான் கலாநிதி சுக்ரி அவர்களை முதன்முதலில் சந்தித்த போது என்னிடம் செல்வம் இருக்கிறது. அதனை எவ்வாறு செலவளிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் எமக்கு சொல்லித்தர வேண்டும் என்றார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்து தனது கல்வியை பாதியிலேயே விட்டுவிட்ட ஒரு ஏழைச்சிறுவனுக்கு அதன் பெற்றோர் எதனைத் தான் கொடுத்துவிட முடியும். ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர் எதனைக் கொடுக்க மறந்தாலும், நேர்மை, உழைப்பு, அன்பு, இலட்சிய வேட்கை, அல்லாஹ்வுடனான உறவு போன்றன அதன் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட வேண்டும். நளீம் ஹாஜியாரின் தாயார் இவை அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார். அதன் விளைவுதான் தன்னைவிடப் பெரிய செல்வந்தர்களையெல்லாம் தான்டி அல்லாஹ்வின் அன்பையும் மக்களின் பிரார்த்தனையையும் தான் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
நளீம் ஹாஜியார் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பாடசாலைக் கல்வியைத் தொடர அவரது குடும்ப நிலை இடம்கொடுக்கவில்லை. சிறு வயது முதலே தனது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை முதுகில் சுமக்கிறார். கையிறு விற்கும் தொழில், அப்பம் விற்பனை செய்தல், வேறு கடைகளில் பணியாற்றுதல் என தொடர்ந்த வாழ்க்கை சந்தர்ப்ப வசமாக மாணிக்கல் வியாபாரம் செய்பவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது. மெதுவாக துறையில் முன்னேறுகிறார். தொழிலைக் கற்கிறார். தானும் சிறிது சிறிதாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார். வியாபாரம் முன்னேறுகிறது. இலாபங்கள் அதிகரிக்கிறது. அவரை ஒரு கோஸ்வரராக அல்லாஹ் மாற்றிவிடுகிறான்.
ஒரு மனிதன் பிற்காலத்தில் என்னவெல்லாம் உலகில் சாதிக்க இருக்கிறான் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அதனால்தான் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிறது இஸ்லாம். மனிதன் தான் சம்பாதிக்கும் பணம் அவனது சட்டைப்பையில் தான் இருக்க வேண்டும். எப்போது அது அவனது உள்ளத்திற்கு போய் விடுகிறதோ அன்றிலிருந்து அவன் பேராசை பிடித்தவனாக அலையத் துவங்குறான்.
நளீம் ஹாஜியார் அவர்கள் ஒரு முறை உம்ராவுக்குச் சென்றிருந்த போது கஃபாவுக்கருகில் இருந்தபடி பிராத்தித்தார்கள். நீங்கள் என்ன பிரார்த்தித்தீர்கள் என கலாநிதி சுக்ரி அவர்கள் கேட்ட போது,’யா அல்லாஹ், எனக்கு நீ இன்னும் அதிகம் செல்வததைத் தருவாயாக. அதனையெல்லாம் உனது பாதையில் செலவு செய்யும் பண்பையும் தருவாயாக’ எனப் பிரார்த்தித்தேன் என்றார்கள். இதுதான் அவர் அல்லாஹ்வோடு செய்துகொண்ட உடன்படிக்கை. அவரது இறுதி மூச்சு வரை இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி வந்தார்கள்.
கையில் காசு இல்லாத போது மனிதன் தன்னை ஆழ்கிறான். காசு வந்ததும் காசு அவனை ஆழ்கிறது. பொதுவாக வசதி வாய்ப்புக்கள் வரும் போது அனைவரும் செய்கின்ற பல தவறுகள் உள்ளன. அவற்றில் எதிலும் சிக்கிக்கொள்ளாது அல்லாஹ் அவரை காப்பாற்றி வந்தான். இது அவர் மீது அல்லாஹ் கொண்ட அன்பைக் காட்டுகிறது.
தான் பிறந்த ஊரின் பாரம்பறியங்களோடு முரன்பட்டுக்கொள்ளாமலும், அதே நேரம் கால சூழல் வேண்டி நிற்கும் மாற்றங்களை சமூகத்திற்கு செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடும்தான் அவர் நளீமியா கலாசாலையை ஆரம்பிக்கிறார். நளீமியா ஆரம்பிக்கப்பட்டதற்கான உடனடிக்காரணம் பற்றி அவர் சொல்லும் போது தான் ஒருமுறை பேருவளையில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது மாலை நேர குர்ஆன் மத்ரஸா மாணவன் ஒருவனை ஒரு மௌலவி தும்புத்தடியோடு விரட்டிச் செல்வதைக் கண்டேன். எனது சமூகத்ததின் நிலைக்கு இதுதான் காரணம் என்பதை நான் புரிந்துகொண்டேன் என்கிறார். மத்ரஸாக்களில் பத்திரிகை வாசித்தாலே தண்டனையாக தலையில் மொட்டை போட்ட காலமது. அந்த காலத்தில் நளீமியாவின் தோற்றத்தை சமூகம் எவ்வாறு ஜீரனித்திருக்கும் என்பதை இந்தக் காலததில் இருந்து புரிந்துகொள்வது சற்று கடினம்தான். ஆனால், அதனை உருவாக்கி விட்டதோடு தனது பணி முடிந்து விட்டதாக அவர் கருதவில்லை. அதனை சமூகத்திற்குக்கொண்டு செல்லல். கடல் தாண்டி உலகத்திற்குக் கொண்டு செல்லல் என தனது இரு கண்களில் ஒன்றாகவே அதனைப் பராமரித்து வந்தார்.
இந்த நளீமியா அவர் செய்த சாதனைகளில் ஒளிவிளக்காகத்தான் அப்போது காட்சியளித்தது. இலங்கையில் நவீன தஃவாவை சுமக்கும் இரண்டு பேரியக்கங்களின் தோற்றுவாய் நளீமியா என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் செய்த அந்த ஸதகதுல் ஜாரியா இயக்கங்களாக, உரைகளாக, வகுப்புக்களாக, பத்திரிகைகளாக, சஞ்சிகைகளாக, கட்டுரைகளாக, குத்பாக்களாக, முஅஸ்கர்களாக, தௌராக்களாக, அறிவு மஜ்லிஸ்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இது இன்ஷா அல்லாஹ் மறுமை வரை தொடரும். அவரது கப்று விசாலித்துக்கொண்டே செல்லும்.
ஒரு தனி மனிதனைப் பொருத்த வரையில் அவன் முன் இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. அவனது சமூகம் அல்லது அவன் சார்;ந்திருக்கின்ற ஜமாஅத் அவனிடமிருந்து இந்த சமூகத்திற்கு என்ன பெற்றுக்கொள்ளப் போகிறது என்பது ஒன்று. அவன் தனது சமூகத்திற்கு தன்னிடமிருந்து எதனைக் கொடுக்கப் போகிறான் என்பது இரண்டாவது. ஒவ்வொரு தனி மனிதனும் தான் இந்த மார்க்கத்திற்கு என்ன செய்துவிட்டுப் போகப் போகிறேன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தத் தெளிவு வெறும் நான்காம் ஆண்டு வரைக் கற்ற நளீம் ஹாஜியாருக்கு இருந்தது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக பல பொய்ப்பிரச்சாரங்களை எதிரிகள் செய்து வரும் காலம் இது. ஆனால், அவை ஒன்று பெரிதாக எடுபடப்போவதில்லை. ஏனெனில், இவற்றுக்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே நளீம் ஹாஜியார் பதில் சொல்லிவிட்டார். அப்போது, முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக மாற்றுக்கருத்துக்கள் வந்தபோது நளீம் ஹாஜியார் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளோடு ஆலோசனை செய்தார். பிரபலமான எல்லா வரலாற்று எழுத்தாளர்களையும் அனுகி இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நளீம் ஹாஜியாரால் அமைக்கப்பட்ட குழு வேண்டிக்கொண்டது. அனைவருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டன. அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்தனவை பிரதம அதிதியாகக் கொண்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அந்தப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது. பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நடாத்தி முடித்தார். காலத்தின் தேவையை சரியாகப் புரிந்த பணியாற்றினார்.
நாடு முழுக்க எங்கு சென்றாலும் அவர் கட்டிய பள்ளி வாசல் ஒன்றோ அல்லது அவர் கட்டிக்கொடுத்த பாடசாலைக்கட்டடம் ஒன்றோ அல்லது அவர்; திருமணம் செய்து வைத்த தம்பதிகளோ அல்லது நளீமியாவில் கற்ற ஒரு மாணவனோ அல்லது இக்ரா தொழில் நுட்பக் கல்லூரியில் கற்ற ஒரு மாணவனோ இருக்கத்தான் செய்வார்கள். ஒரு தனி மனிதனால் எப்படி இவ்வாறெல்லாம் செய்ய முடியும். இது உண்மையில் ஒரு அசாதாரண மனிதனின் உழைப்பால்தான் முடியும். இது தான் அல்லாஹ் அவருக்குக்கொடுத்திருந்து அருள்.
நளீம் ஹாஜியார் பற்றி அவருடன் அதிக நெருக்கமான உறவு வைத்திருந்த கலாநிதி சுக்ரி அவர்கள் குறிப்பிடும் போது, அவரை அல்லாஹ் ஒரு பணிக்காகத்தான் படைத்தான். அதனை அவர் மூலம் நிறைவு செய்துகொண்டான் என்கிறார்கள். நளீம் ஹாஜியார் அவர்கள் வபாத்தாகி நல்லடக்கம் செய்யப்பட்ட அன்று சில நண்பர்களோடு போய் அவரது பழைய ஆவணங்கள் பலவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் அவருக்கு நாட்டின் நாலா பாககங்களிலிருந்தும் அவருக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பல காணப்பட்டன. அவற்றைக் கண்டு நாம் பூரித்துப் போனோம். அப்போது அவரது கடைசி மகனான் யாகூத் நளீம் அவர்கள் சொன்னார்கள். ‘வாப்பா சொல்வார். நான் மரணித்த பின்னர்தான் என்னைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். அவரது ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்க்கின்ற போது அவரது அந்த வார்ததைகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன’ இந்த மைத்திற்கு வந்தளவு சனத்திரழ் வேறு எந்த மையித்திற்கும் வந்திருக்க மாட்டார்கள் என அங்கு வந்திருந்த பலரும் சொன்ன செய்திதான்.
அவர் வீட்டில் தனியாக சாப்பிட்டது மிகவும் அறிது. எப்போதும் யாராவது ஒரு விருந்தாளி அவரது சாப்பாட்டில் பங்குகொள்வார். அவரை சந்திக்க நண்பர்கள் சகிதம் அவரது வீட்டுக்குச் சென்றோம். அது அவரது அந்திம காலம். வீட்டுக்குச் சென்று ஸலாம் சொன்னதுதான் தாமதம் ‘என்ன சாப்பிடுவோம். என்ன குடிப்போம்’ என்றுதான் கேட்டார். அவரது வீடு எப்போதும் விருந்தாளிகளுக்குத் திறந்திருந்தது.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை அவர் தனித்திருந்து செய்தார். நளீமியா என்ற கலாசாலையொன்றை நிறுவினார். இக்ரா தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவினார். பல பள்ளிவாசல்களை நிர்மானித்தார். பல பாடசாலைகளில் கட்டடங்களை அமைத்தார். விளையாட்டு மைதானங்கள் அமைத்தார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறை தொகுத்தார். பல பெண்களின் திருமணங்களை நடாத்தி வைத்தார். பல ஏழை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கினார். அவரது சேவைகளைப் பெற்றவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமல்ல பிற மதத்தவர்களையும் அரவணைத்துக்கொண்டார்.
இமாம் ஹஸனுல் பன்னா அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். ‘நீங்கள் பெரிதாக புத்தகங்கள் எழுதவில்லையே’. அதற்கு இமாமவர்கள் சொன்னார்கள். ‘நான் புத்தகங்களை எழுதுபவர்களை உருவாக்கியிருக்கிறேன்’ அந்த வகையில் நளீம் ஹாஜியார் அவர்கள். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தஃவா அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறார். பல நிறுவனங்களை அமைத்திருக்கிறார். பல்லாயிரம் உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் மரணித்த பின்னரும் அல்லாஹ்வின் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரது ஸதகதுல் ஜாரியாக்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன.
நளீம் ஹாஜியாரை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர் எமக்கு முன்னுதாரணமாகவே திகழ்கிறார். ஒரு தந்தையாக, வியாபாரியாக, கோடிஸ்வரராக, ஒரு தாஈயாக என அவரது ஆளுமை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
தனது தேவைகளுக்கு மேலதிகமாக வருமானம் உழைக்கின்ற இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் நளீம் ஹாஜியாரின் வாழ்வை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாம் சமூகத்திற்கு என்ன பங்களிப்பை வழங்க முடியும் என்பதை தெரிந்துகொள்வார்கள். ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதல்ல முக்கியம். அவன் சம்பாதிப்பதில் எவ்வளவு செலவு செய்கிறான் என்பதுதான் முக்கியம்.
No comments
Thanks for reading….