அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.
மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 9 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 215 வீரர்கள் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். 754 வீரர்கள் இதுவரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத, அறிமுகமாகத் துடிப்பவர்கள். 2 வீரர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடுகளில் இருந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதில் வீரர்கள் அனைவரும் 73 இடங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.
ஐபிஎல் வீரர்கள் பதிவு செய்தல் என்பது கடந்த மாதம் 30-ம் தேதியோடு முடிந்துவிட்டது. இனிவரும் 9-ம் தேதி வரை அணிகள் தங்களின் வீரர்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். அதாவது எந்த வீரர்களைத் தக்கவைப்பது, விடுவிப்பது போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வீரர்கள் தவிர்த்து ஐபிஎல் போட்டியில் விளையாடிய 19 இந்திய வீரர்கள், எந்தப் போட்டியிலும் பங்கேற்காத 634 இந்திய வீரர்கள், ஒரு ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடிய 60 வீரர்கள், சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ள 196 வீரர்கள், சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாத 60 வீரர்கள் களத்தில் உள்ளார்கள்.
இதில் ஆப்கானிஸ்தான் (19 வீரர்கள்), ஆஸ்திரேலியா (55வீரர்கள்), வங்கதேசம் (6 வீரர்கள்), இங்கிலாந்து (22 வீரர்கள்),நெதர்லாந்து (1 வீரர்), நியூஸிலாந்து (24 வீரர்கள்), தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39 வீரர்கள்), அமெரிக்கா (1 வீரர்), மே.இ.தீவுகள் (34வீரர்கள்), ஜிம்பாப்வே (3 வீரர்கள்) களத்தில் உள்ளனர்.