பிள்ளையை பெற்ற எனக்கே அந்த பிள்ளையின் தேவையைப்பற்றி நன்றாக தெரியும் : ஒலுவில் துறைமுகம் தொடர்பில் மீனவர்கள் மத்தியில் அதாஉல்லா
ஒலுவில் மீன்பிடி துறைமுகமானது எமது பகுதி மீனவர்களின் தேவையறிந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் தலைவர் அஸ்ரப் முன்வைத்த கோரிக்கை. அந்த மீனவ துறைமுகத்தை உருவாக்குவதில் தலைவர் அஸ்ரப் கொண்டிருந்த உறுதிக்கு நாங்கள் பக்கபலமாக இருந்து என்னுடைய கடுமையான போராட்டத்தினால் அதனை உருவாக்கினேன். தலைவரின் வழிகாட்டலில் நான் பிரசவித்த பிள்ளை அந்த துறைமுகம். ஆனால் இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது கடும் வேதனையாக இருக்கிறது. பிள்ளை நோய்வாய்ப்பட்டதால் அதை சாகடிக்க முடியாது. மருத்துவமே செய்ய வேண்டும். அந்த துறைமுகத்தை தலைவர் அஸ்ரப் தேவையில்லாமல் அமைத்ததாகவும் அது உடைத்தெறிய வேண்டியது என்றும் தொலைக்காட்சிகளில் தோன்றி சிலர் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு மடமையில் உள்ளனர் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களுக்குமிடையில் கல்முனையில் நேற்றிரவு (20) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மீனவர்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் பேசிய அவர்,
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட போது நாங்கள் நிவாரணங்களை வழங்கினோம். அது போதாது என்பதை அறிந்து நாங்கள் இன்னும் செய்ய ஆயத்தமாகவும் இருந்தோம். அரசியல் காரணங்களுக்காக நஷ்டஈடு கொடுக்கும் அந்த கூட்டத்தையே குழப்பி நிகழ்வுகளை திசைதிருப்பி அரச சொத்துக்களை சேதமாக்கி அந்த மக்களையும், மீனவ சமூகங்களையும் நடுவீதியில் அலைய வைத்தார்கள். ஆனால் நாங்கள் தைரியமாக எங்களுடைய பணிகளை செய்தோம். பின்னர் எமது வாக்குகளால் தெரிவாகி வந்த எமது மக்கள் பிரதிநிதிகள் எமது தலைவன் கனவு கண்ட குழந்தையான அந்த துறைமுகத்தை கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை. அதற்காக நாங்கள் அந்த குழந்தையை கைவிட முடியாது.
அரசியல் காரணங்களுக்காக அபிவிருத்திகளை தடுக்கும் சின்னத்தனமான ஒருவரல்ல அதாஉல்லாஹ். இந்த கல்முனைக்கு நான் கொண்டுவந்த பாலங்கள் உட்பட எத்தனையோ அபிவிருத்திகள் தடுக்கப்பட்டுள்ளது. நானும் மீன்பிடிக்கான அமைச்சராக இருந்திருக்கிறேன் மீனவர்களுக்கான வீடமைப்பு அமைச்சராக இருந்து பல திட்டங்களை செய்திருக்கிறேன். சாய்ந்தமருதில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்க்கே இயந்திரங்கள் கொள்வனவு செய்துள்ளோம்.
நாங்கள் கனவுகண்டு உருவாக்கிய பிள்ளை அந்த ஒலுவில் துறைமுகம். அதன் சரி, பிழைகள், முன்னேற்றங்களை நான் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன். இடையில் வந்தவர்களுக்கு அந்த துறைமுகத்தை பற்றிய எவ்வித அறிவுமில்லை. எமது தலைவர்களுக்கு இதனை தீர்த்துவைக்க எந்தவித அறிவுமில்லை. இவர்களின் அறிவு பிரதேச வாதத்தையும், இனவாதத்தையும் உருவாக்குவதில் மட்டுமே இருக்கிறது. மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு தொழிற்சாலையை அமைத்த போது நாங்கள் அதை ஒலுவிலுக்கும் அமைக்க கோரி செய்து காட்டியவர்கள். எங்களுக்கு அந்த துறைமுகத்தின் தேவைகளும்,பிரச்சினைகளும் மீனவர்களாகிய உங்களை விட அதிகமாக தெரியும்.
நீங்கள் சந்தோசமாக வாழ்ந்த காலங்களை பற்றி பேசும்போது எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அது எமது பிரதேச மீனவர்கள் அறுவடை செய்யும் இடம். அந்த இடத்தின் நிலையை அண்மைய ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைக்காக சாய்ந்தமருதில் இருந்து அக்கறைப்பற்றுக்கு உலங்கு வானுர்தி மூலம் நானும் பிரதமர் மஹிந்தவும் சென்ற போது ஒலுவில் துறைமுகத்தை காட்டி அதன் பிரச்சினைகளை விளக்கிய போது அக்கரைப்பற்று கூட்டத்தில் மிக தெளிவாக கூறினார். எமது ஒலுவில் துறைமுகத்தை வளமிக்க மீனவ துறைமுகமாக மாற்றி தருவதாக.
மண்ணை அகழ்வதற்கான இயந்திரத்தை சிறியளவில் அமைச்சிலும், மாகாண சபையிலும், அக்கரைப்பற்று மாநகர சபையிலும் வாங்கி வைத்துள்ளோம். அது போன்ற துறைமுகத்தில் பொருத்தமான ஒன்றை பொருத்தி தொடர்ச்சியாக இயங்க செய்தால் இப்படியான பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். அதுபற்றி சிந்திக்க முடியாதவர்களினாலையே நாங்கள் இந்த பிரச்சினைகளை சந்திக்கிறோம்.
அத்துடன் எமது பிரதேசம் வயல் வெளியையும், கடல் வளத்தையும், விலங்கு வேளாண்மையையும் அதிகமாக கொண்டது. ஆனால் இன்றும் நாம் பால் பவுடர்களையே பாவிக்கும் நிலையில் இருக்கிறோம். வேளாண்மையில் சிறந்த விளைச்சல் இல்லை. மீன்பிடியில் முன்னேற்றமில்லை. காரணத்தை நாம் ஆராயவேண்டும். பாரம்பரிய முறையிலிருந்து நவீன தொழிநுட்ப முறைக்கு நாம் பழக்கப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் வந்து மீன்பிடிக்க காரணம் இலங்கையில் அதிகமாக இருக்கும் மீன்களே. எமது கடல்வளத்தை நாம் சரியாக பயன்படுத்த ஆரம்பித்தால் எமது மீனவ சமூகம் போதாமல் ஆகிவிடும் என்றார்.
(நூருல் ஹுதா உமர் )