இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான T20 பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கென்பரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க இலங்கை, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஓஷத பெர்னாண்டோ 25 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தபடியாக வனிந்து ஹசரங்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத் தவறினர்.
அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி சார்பில், ப்ளூம்பீல்ட் மற்றும் டேனியல் கிரிஸ்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்ட, எதிரணி ஓட்டங்கள் பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டது.
எனினும், அந்த அணியின் விக்கெட் காப்பாளர் ஹெரி நீல்ஷன் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதும், தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றார்.
ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிக்கு இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில், 79 ஓட்டங்களை விளாசியிருந்த நீல்ஷன் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் பந்து வைட் பந்தாக வீசப்பட்டதால் , 5 பந்துகளில் 8 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது.
இதன்போது களமிறங்கிய பவாட் அலாம் பௌண்டரி விளாசி, வெற்றியை நெருங்க, இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. குறித்த பந்தை ராஜித வைட் பந்தாக வீச, அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஹெரி நீல்ஷனை தவிர ஏனைய வீரர்களில் டேனியல் கிரிஸ்டன் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை அடைந்து 13 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.