பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாக கொண்டு விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிம் இக்பால் இன்னும் சில தினங்களில் அவரின் இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அதோடு, அவரது மனைவியின் உடல் நிலையும் சற்று மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களை தனது சொந்தக்காரணமாக முன்வைத்தே, தமிம் இக்பால் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியிருக்கின்றார்.
தமிம் இக்பால் இல்லாத நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பயிற்சிகளுக்காக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸினை அழைத்திருக்கின்றது. எனினும் இம்ருல் கைஸ், தமிம் இக்பாலின் பிரதியீட்டு வீரராக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தமிம் இக்பால் இந்திய சுற்றுப் பயணத்தில் ஆடாத விடயம் பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தது.
”தமிம் தனது காரணங்களை எங்களுடன் கலந்துரையாடி, இந்திய சுற்றுப்பயணத்தில் ஆடமுடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். நாம் அவரின் வேண்டுகோளை ஏற்றிருப்பதோடு அவருக்கான பிரதியீட்டு வீரரினையும் மிக விரைவில் அறிவிப்போம்.”
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்காது போயிருந்த போதும், அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆடி தனது வழமையான ஆட்டத்திற்கு மீண்டிருந்தார். இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தில் தமிம் இக்பால் இல்லாது போவது பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பாரிய இழப்பாகும்.
அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இனிவரும் காலங்களில் விக்கெட் காப்பாளராக செயற்பட போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.
இதுவரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் முஷ்பிகுர் ரஹீம், 101 பிடியெடுப்புக்களை எடுத்திருப்பதோடு, 31 ஸ்டம்பிங்களையும் செய்திருக்கின்றார். எனினும், முஷ்பிகுர் ரஹீம் தற்போது தனது துடுப்பாட்டத்தை இன்னும் வலுப்படுத்த எதிர்பார்த்து, அதிக வேலைப்பளுவினையும் கருத்திற் கொள்ளும் நிலையிலையே டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பு வேலைக்கு பிரியாவிடை கொடுக்க எதிர்பார்த்திருக்கின்றார்.
”நான் இப்போது டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதனை விரும்பவில்லை. நான் இப்போது நிறைய போட்டிகளில் ஆடுகின்றேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அப்பால் நான் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் மற்றும் டாக்கா ப்ரீமியர் லீக் போன்ற போட்டிகளிலும் ஆடுகின்றேன். இவற்றை கருத்திற்கொள்ளும் போது, (டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பில் ஈடுபடுவது) அதிக வேலைப்பளுவாக இருக்கின்றது.”
”நான் (பங்களாதேஷ்) இறுதி பதினொருவர் அணியில் இருப்பதோடு மட்டுமல்லாது (ஒரு துடுப்பாட்ட வீரராகவும்) எனது சிறந்ததை வழங்க விரும்புகின்றேன்.” என முஷ்பிகுர் ரஹீம் குறிப்பிட்டிருந்தார்.
முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பினை கைவிட்ட நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி புதிய விக்கெட் காப்பாளருடன் களமிறங்கும் என நம்பப்படுகின்றது.
பங்களாதேஷ் அணியின் இந்திய சுற்றுப்பயணம், அடுத்த மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றது. இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.