"உன்ன எப்புடி கஷ்டப்பட்டு வளர்த்தன், இப்புடி போயிட்டியே! ஏன்டா இந்த காரியம் பன்ற? நாங்க உனக்கு என்னடா கொற வெச்சோம்? ஏன்ட மானத்த வாங்க பொறந்தாயோ?" இப்படியிப்படி ஓலமிடும் பெற்றோர் இப் பிரச்சினைகளுக்கெல்லாம் அடித்தளம் எங்கிருந்து வந்ததென சிந்திக்க வேண்டும்.
“இவன் சரியான மோசம், இவன திருத்தவே ஏலாது, ரோட்டுல குடிச்சிட்டு கெடக்கான், பொடியன் கென்சியோட சேர்ந்து சிகரெட் குடிச்சிட்டு இருந்தத என் கண்ணால பார்த்தன், இவன் எல்லாம் எங்க உருப்படப் போறான்கள்? ஏன்டா நீ இப்படி இருக்க?"
அடிக்கடி செவிகளில் விழும் கவலையான வார்த்தைகள் இவை. ஆனால் ஒரு பிள்ளை கருவான நாள் தொட்டு அந்த தாயின் செயற்பாட்டில் அவனது எதிர்காலம் நிர்ணயிக்கப் படுவதனை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர்?
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை சீராக வார்க்கப்பட வேண்டுமென்று கனவு கண்டாலும், வளர்ப்பு முறை குறித்து சிந்திக்க வேண்டும்.
இன்றைய இவ் இயந்திரமயமான உலகத்திலே எத்தனையோ விடயங்கள் இலகுபடுத்தப் பட்டிருக்க, அதன் விளைவுகளில் ஒன்றாக தாய்ப்பால் புகட்டலில் நேர்ந்துள்ள அசிரத்தை கவனிக்கப்பட வேண்டியது.
"நான் ஜொப்(job) க்கு போறதால ஏன்ட புள்ளக்கி போத்தல் பால் தான் பழக்கி இருக்கன், பால் குடுத்தா அழகு கொறஞ்சிடும் போத்தல் பால் நல்லமே, அந்த பொம்புளய பேசி இருக்கன் அவங்க புள்ளக்கி பால் கொடுப்பாங்க, இவனுக்கு பால் குடுக்க எல்லாம் எங்க டெய்ம் கெடக்கு? போத்தல் பால் தான் எப்பவுமே...."
இப்படியிப்படி பெற்றெடுத்த பிள்ளைக்கு, அரவணைத்து பாலூட்ட இயலாதளவுக்கு இன்றைய தாய்மார்கள் மாறிவிட்டார்கள். ஆனால் இதன் பாரதூரமான விளைவுகள் இவர்களுக்கு தெரியாமல் போனது தான் கவலையே!
உளவியல் படிக்கும் மாணவியாய் பாடத்திட்டத்திலே, ஒரு குழந்தை உருவானது தொட்டு அதன் வளர்ச்சிக் கட்டங்களை "Life span development" என்ற அலகினூடாக கற்ற போது பல விடயங்களை புரிந்து கொள்ள முடிந்தது. குறித்த கருத்துக்களில் பால்குடி சம்மந்தமான உண்மைகளை புனித அல்குர்ஆனும் ஒப்புவித்திருக்க இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளை எடுத்து தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து தெளிவினை உண்டு பண்ணவே இவ்வாக்கத்தை படைக்க எத்தனித்தேன்.
அதன்படி Sigmond Freud என்ற உளவியல் அறிஞர் உடலிலுள்ள பாலுணர்வைத் தரக் கூடிய பாகங்களை வைத்து ஆளுமை வளர்ச்சிக் கட்டங்களுக்கு விளக்கம் கொடுத்தார். இவர் ஆளுமை வளர்ச்சியில் ஒரு பிள்ளை தாண்டும் ஐந்து பருவங்களை ஆளுமை வளர்ச்சிப் பருவங்களாகப் பெயரிட்டார்.
01- வாய்வழி இன்ப நிலை (பிறப்பு-02வயது வரை)
02- குதவழி இன்ப நிலை (2-3 வயது)
03- லிங்கவழி இன்ப நிலை(3-6வயது)
04- பாலுறைக் காலம் (07-11 வயது)
05- பாற்குறிக் கட்டம் (11 வயதிலிருந்து ஆரம்பம்)
இங்கு வாய்வழி இன்ப நிலை என்ற பருவமே தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை சொல்ல வருகின்றது. வாய் நிலையில் பிள்ளையின் உள, பால் இயல்பூக்கங்கள் வாயினை அடிப்படையாக வைத்தே செயற்பட துவங்குகின்றன. அதாவது தாய்ப்பால் குடித்தல், விரல் சூப்புதல், விளையாட்டுப் பொருட்களை சூப்புதல் போன்ற விடயங்களனூடாக குழந்தை இன்பம் அனுபவிக்கின்றது. இந்நிலை பொடுபோக்காக கைகொள்ளப் பட்டால் குழந்தையின் எதிர் காலத்தில் அது தாக்கம் செலுத்தும். அதாவது இக் காலப்பிரிவில் முறையாக பாலூட்டப்படாத பிள்ளைகளே பிறகு புகைத்தல் போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு ஆற்படுவதாக உளவியல் சொல்ல வருகின்றது. மேலும் விரிவாக சொன்னால், வாய்வழி இன்ப நிலையினூடாக போதியளவு இன்பம் காணாத பிள்ளைகளின் உள்ளத்தே அதன் தாக்கம் பதிவாகி பிறகு வேறு வழியினூடாக குறித்த இன்பத்தை பெற்றுக்கொள்ள நாடுவதால் முறையற்ற பாவணைகளுக்கு உற்படும் அபாயம் உண்டாகின்றது.
Freud இப் பருவத்தை குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு வருடங்கள் என அடையாளப் படுத்தியிருக்க புனித அல்குர்ஆன்
"மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்து வழியுறுத்துவோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டு சுமந்தாள். அவன் பாலறுந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்" (31:14) என்ற வசனத்தினூடாக ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகள் பாலூட்டப்பட வேண்டும் என்ற கூற்று நிரூபனமாகின்றது.
மேலும் உளவியலின் கருத்துப்படி "குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்கள் குழந்தையின் உடல், மன, மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். இப்பருவத்தில் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தடை ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் சீராக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்" என்றியம்ப,
புனித இஸ்லாம் இது குறித்து பேசுகையில்,
"பாலூட்ட வேண்டும் என்று விரும்புகின்ற கணவனுக்காக விவாகரத்து செய்யப்பட்ட தாய்மார்கள் தமது குழந்தைக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவு, உடை வழங்குவது குழந்தையின் தந்தை மீது கடமையாகும்" (அல்குர்ஆன்) இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையில் பிரிவு வந்தாலும் குழந்தைக்கு பாலூட்டுவதனை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
மேலும் குழந்தை உயிர் வாழும் கடைசி மணித்துளிகள் வரையிலான உடல், உள ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது தாய்ப்பாலாகும் என்பதனாலேயே மரண தண்டனைக்குரிய ஒரு தாயின் தண்டனையை குழந்தை பால்குடி மறக்கும் வரை நபியவர்கள் பிற்போட்டிருந்தார்கள்.
இன்று மனஅழுத்தம் என்ற நோய் தீவிரமாகியிருக்க,
குழந்தைக்கு முறையாகப் பாலூட்டப்படாவிட்டால் மன அழுத்தம், உடல்எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற விளைவுகள் பிற்பட்ட காலத்தே ஏற்படும் சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் முன்மொழிகின்றன.
இவ்வாறு தாய்ப்பால் புகட்டலில் பல வியக்க வைக்கும் உண்மைகளிருக்க முறையாக பாலூட்டப்படா பிள்ளைகளின் ஆரோக்கியமற்ற, பொடுபோக்கான எதிர்காலத்துக்கு ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்புக் கூற வேண்டும்.
இன்று போத்தல்பால் என்பது சர்வசாதாரணமாய் போயிருக்க, குழந்தையை அரவணைத்து தாய்ப்பால் புகட்டா வேளையில் தாயுக்கும், பிள்ளைக்குமான உறவு பலப்படுத்தப்படும் நிலைமையில் வீக்கம் ஏற்படுகின்றது. இதனால் குறித்த பிள்ளை வெற்றிடமான இடைவெளியை நிரப்பிக் கொள்ள எதிர்பாலாருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வெளிப் பிணைப்புக்களை உண்டுபண்ணிக் கொள்கின்றது. இதனாலேயே காதல் பிரச்சனைகளுக்கும் இன்றைய பெற்றோர் முகம் கொடுத்து வருகின்றனர்.
"உன்ன எப்புடி கஷ்டப்பட்டு வளர்த்தன், இப்புடி போயிட்டியே! ஏன்டா இந்த காரியம் பன்ற? நாங்க உனக்கு என்னடா கொற வெச்சோம்? ஏன்ட மானத்த வாங்க பொறந்தாயோ?" இப்படியிப்படி ஓலமிடும் பெற்றோர் இப் பிரச்சினைகளுக்கெல்லாம் அடித்தளம் எங்கிருந்து வந்ததென சிந்திக்க வேண்டும்.
*உங்கள் கவனத்துக்கு*
தாய்ப்பால் புகட்டலில் பொடுபோக்கான பெற்றோர் மேற் சொன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேருகையில் உங்களின் மேலுள்ள குற்றமே உம் பிள்ளையின் எதிர்காலத்தை சூறையாடிக் கொண்டுள்ளமையை மறக்க வேண்டாம்.
By Writer: Aathifa Ashraf
South Eastern University of SriLanka