சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையினால் கம்பஹா மாவட்டமே அதகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 43 000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 899 பேர், 42 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அத்தனுகளு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (25) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் ஹொரணை பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின்
தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம ஆகிய செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, அயகம, கிரியெல்ல, பெஹலியகொட, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தொட்டை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தறை பிட்டபெத்தர மற்றும் அத்துரலிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால், சில பகுதிகளுக்கு மின்விநியொகம் தடைப்பட்டுள்ளதுடன், அதனை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.
சீரற்ற வானிலை மற்றும் வௌ்ளம் காரணமாக சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, வட மேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலை நாளை (26) முதல் குறைவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.