இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களாலும் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்கவே இன்று பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.
இதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினோம். எங்கள் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஏனெனில் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவில்லை. எங்கள் பகுதியில் அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.
தவறான கணிப்பால் தான் போர்கள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளிடமும் தற்போது ஆயுதங்கள் உள்ளன. நாங்களும் தவறாக கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். பிறகு நானோ, நரேந்திர மோடியோ எதையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் சரியான புரிதல் வேண்டும். தீவிரவாத பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயாராக உள்ளோம்.என நான் கூறுகிறேன்.
KUMBUKKANDURA NEWS