கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்களும், ஹஸ்ரத் உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களும் மதீனத்து வீதியில் அஸர் தொழுகைக்கு பிறகு அளவளாவிக்கொண்டு உலா வருகின்ற சமயம், ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள், இருவருக்கும் ஸலாம் கூறி ஏதும் ரகசியம் பேசிக்கொண்டு செல்கிறீர்களா..? நானும் உங்களுடன் வரலாமா..? என வினவினார்கள்..
அவர்கள் இருவருடன் செல்ல அனுமதி பெற்று மூவரும் சென்றுகொண்டிருந்த சமயம் தெருக் கோடியில் கூன் விழுந்து குச்சி ஊண்டி புர்கா அணிந்த மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள், “உமரே ..! அந்த மூதாட்டிக்கு ஐம்பத்தைந்து வயதிருக்குமா ..?” எனக் கேட்டார்கள். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “யா ரசூலுல்லாஹ் அந்த மூதாட்டிக்கு நடையெல்லாம் தளர்ந்து விட்டது எழுபத்து ஐந்து வயதிருக்கும்” என்றார்கள், “தாங்கள் இருவரும் சொல்வதைவிட அந்த அம்மாவிற்கு தொண்ணூற்று ஐந்து வயது இருக்கும்” என ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.
“அலியே ..! நாங்கள் இருவரும் மஸ்ஜிதிற்கு செல்கிறோம் நீங்கள் சென்று அந்த அம்மா யார் ..? அவர்களின் பெயர் என்ன ? என்ன வயது என கேட்டு வாருங்கள்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் பணித்தார்கள் ..! பெருமானார் அன்னவர்களின் கட்டளை அல்லவா என நினைத்து பின் தொடர்ந்தார்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.
அந்த மூதாட்டி நேராக பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் வீட்டிற்குள் சென்றார்கள். அதை கண்ட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள். தன் மனைவி பாத்திமா நாயகியிடம் கேட்டு விபரங்கள் தெரிந்து கொள்ளலாமென வாசலிலேயே உட்க்கார்ந்து விட்டார்கள். வீட்டிற்குள் சென்ற மூதாட்டி வராததால், வீட்டின் கதவை தட்டினார்கள். “யார் அது..?” என உரத்த குரலில் அன்னை பாத்திமா நாயகி இடமிருந்த பதில் வந்தது, “நான்தான் உங்கள் கணவர் அலி” என பெயர் சொன்னார்கள்.
பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா தன் கணவருக்கு ஸலாம் சொல்லி உள்ளே அழைத்தார்கள். அப்போது ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள், “பாத்திமா இப்போது வயது முதிர்ந்த அம்மா ஒருவர் உள்ளே வந்தார்களே..? அவர்கள் எங்கே” என்று கேட்டார்கள். அதற்கு அன்னை பாத்திமா நாயகி, “ஓ'....அவர்களையா கேட்கிறீர்கள்...? அது நான் தான் அஸருக்கும் மஃரீபிற்கும் இடைப்பட்ட நேரத்தில் அவசியமான வேலையாக வெளியில் செல்ல வேண்டும் என்றிருந்ததால் அந்நிய ஆடவர்கள் நம்மீது தப்பான அபிப்பராயம் கொள்வார்களோ என்றெண்ணி கூனிக்குறுகி, குச்சி ஊண்டி கிழவிபோல நடந்து சென்று வந்தேன்” என்றார்கள்.
ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஆச்சரியத்துடன், “உங்களின் தந்தை அன்னவர்கள் ஐம்பத்து ஐந்து வயது என்றும், ஹஜ்ரத் உமர் அவர்கள் எழுபத்தைந்து வயது என்றும், நான் தொண்ணூற்று ஐந்து வயது என்றும் கணக்கு போட்டுவிட்டு அல்லவா இங்கு வந்துள்ளேன்” எனக்கூறிவிட்டு,. “நான் சென்று பெருமானார் அன்னவர்களிடம் போய் இதை சொல்கிறேன்” என விரைந்தார்கள்.
ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அருகில் வருவதற்கு முன்னரே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ''என் மகள் பாத்திமாவிற்கு தொண்ணூற்றி ஐந்து வயதிருக்குமா..?” என புன்னைகையுடன் கேட்டார்கள்.
“உங்களின் மகள் பாத்திமா என தெரிந்து தான் கேட்டீர்களா..? யா ரசூலுல்லாஹ்” என்றார்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.
“ஆம், அந்நிய பெண்களை பார்த்து வயதை கணக்கிட நாம் யார்? என் மகள் என்பதை அறிந்தல்லவா தாங்களை நான் அனுப்பினேன்” என அண்ணலார் அன்னவர்கள் திருவாய் மொழிந்தார்கள்.
இந்த நிகழ்வுகளின் மூலம் நாம் அறியப்படும் படிப்பினைகள்:
சிலர் அன்னியப் பெண்களை பார்த்து வயதையும் வாலிபத்தையும் கணக்கிடுகின்றார்கள். அவர்களுக்கு அந்நிய பெண்களை பார்த்து ரசிக்க கூடாது என்றும், இருவர் சேர்ந்து சென்றால் அவர்களிடம் ஏதும் ரகசியம் பேசிக்கொண்டு செல்கிறீர்களா.? நான் உங்களுடன் சேர்ந்து வரலாமா என உத்தரவு பெற்ற பின்பே அவர்களுடன் சேர்ந்து செல்லுதல் உத்தமம் என்பதும், வீட்டுக்கதவை தட்டினால் வீட்டிலுள்ள பெண்கள் யார் அது? என உரத்தக்குரலில் கேட்க வேண்டிய நியதியும், வெளியில் நிற்பவர் நான் தான் என்று கூறுவதை விட அவரின் பெயரையும் இணைத்து கூற வேண்டும் என்பதையும், நம் வீடாக இருந்தாலும் வீட்டினுள் செல்லும் முன் அன்னியப்பெண்கள் (விருந்தினர்) யாரும் சில சமயம் வீட்டினுள் இருப்பார்கள் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு உத்திரவு பெற்றே உள்ளே செல்லவேண்டும் என்ற படிப்பினையும் நாம் பெற கடமைப்பட்டுள்ளோம்.
பெருமானார் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மொழிகளையும் வழிகளையும் பின்பற்றக்கூடிய பாக்கியவான்களாக நம் அனைவர்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாகவும் ...! ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்!!
{ ரபீக் அஹமது ஃபைஜி }
No comments
Thanks for reading….